உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, February 06, 2009

நாடு இல்லாமல் ஒரு மொழி

அநியாயமாக இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படும் விடயத்தில் விஷமாக நீண்ட அமைதி காக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு நம் கண்டனங்கள்.

பிரபல இலங்கை எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் சிந்திக்க வைத்த சில வரிகள் இங்கே:


‘நான் நிறைய பேசிவிட்டேன். நீங்கள் எந்த நாடு, என்ன மொழி பேசுவீர்கள் என்று சொல்லவில்லையே?’.

நான் சொன்னேன். நானும் உங்களைப் போலத்தான். நான் பேசுவது தமிழ்மொழி. இலங்கைக்காரன். அங்கே எங்கள் மொழியை சிங்களம் விழுங்கிக்கொண்டிருக்கிறது.

உங்கள் மொழியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது பழைய மொழி அல்லவா?

அது உண்மை. இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மையான இலக்கியங்கள் எங்களிடம் இருக்கின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு 300 ஆண்டுகள் முன்னராகவே செதுக்கிய தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் குகைகளில் கிடைக்கின்றன. இன்று உலகத்தில் பல நாடுகளில் 80 மில்லியன் மக்கள் தமிழ் பேசுகிறார்கள்.

எண்பது மில்லியனா? நம்பவே முடியவில்லை. எங்கள் மொழியிலும் பார்க்க 80 மடங்கு அதிகமான எண்ணிக்கை. அதிர்ஷ்டம் செய்த மொழி. ஆனால் உங்களுக்கென்று ஒரு நாடு உண்டா?

இல்லை.

உங்கள் மொழியில் தேசிய கீதம் உண்டா?

இல்லை.

அப்படியானால் உங்கள் மொழிக்கும், என் மொழிக்கும் பெரிய வித்தியாசமே இல்லை.

எப்படி அவ்வளவு நிச்சயமாகச் சொல்லமுடியும்?

நீங்கள் வரலாற்றைப் படித்தால் தெரிந்துவிடும். கிறிஸ்து பிறப்பதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னரே ஹீப்ரு மொழியும், அராமிக் மொழியும் செழித்து வளர்ந்தன. இரண்டுக்குமே சமவயது. இரண்டிலுமே எழுதப்பட்ட செல்வங்கள் இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நாளடைவில் இரண்டு மொழிகளுமே நலிந்தன. 100 வருடங்களுக்கு முன் ஹீப்ரு மொழி எழுத்தில் மட்டுமே வாழ்ந்தது. பேசுவதற்கு ஓர் ஆன்மா இல்லை. இன்று ஐந்து மில்லியன் மக்கள் ஹீப்ரு பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். பழைய இலக்கியங்களும் புதிய இலக்கியங்களும் படிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நாடு உண்டு. அதன் பெயர் இஸ்ரேல். அவர்களுடைய மொழி இனி மேல் அழியவே அழியாது.

நாடு இல்லாமல் ஒரு மொழி வாழமுடியாது என்று சொல்கிறீர்களா?

நான் ஒரு தலைமுடி திருத்துபவன். மொழியியல் அறிஞன் அல்ல. எனக்கு என்ன தெரியும்? நாடு இல்லாமல்தானே என் மொழி சிதைந்தது. நாடு இருந்தபடியால் தானே இறந்து போன ஹீப்ரு மொழி மறுபடியும் உயிர்பெற்று நிலைத்து நிற்கிறது. உங்கள் மொழி - தமிழ் - நாடு இல்லாமல் வாழும் என்று நினைக்கிறீர்களா?

‘ஆனால் இந்தியாவில் ஒரு தமிழ் மாநிலம் இருக்கிறதே.’

மாநிலம் வேறு. நாடு வேறு. இன்று உலகத்திலுள்ள ஒரு சின்னஞ் சிறிய நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள் - மால்ட்டா. அங்கே 400,000 மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுடைய மொழி மால்ட்டீஷ். அந்த மொழி அழியுமா? அழியாது. ஒரு மைல்கல் எப்போதும் உண்மை பேசுவதுபோல நான் பேசுகிறேன். அவர்களுடைய மொழி அழிய வேண்டும் என்றால் முதலில் அந்த நாடு அழியவேண்டும். உங்கள் நாட்டுக்கு சமீபத்தில் இருக்கும் மாலை தீவு, அதை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடைய சனத்தொகை 350,000. அவர்களுடைய மொழி திவேஹி. அது அழியுமா? எப்படி அழியும்? 300,000 மக்கள் வாழும் நாடு ஐஸ்லாண்ட். அவர்களுடைய மொழி ஐஸ்லாண்டிக். அது அழியுமா? இல்லை. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

நம்புவதற்கு கஷ்டமாக இருக்கிறது. பத்து மில்லியன் மக்கள் ஒரு மொழியைப் பேசினாலும் அவர்களுக்கு ஒரு நாடு இல்லாவிட்டால் அந்த மொழி அழிந்துவிடும் என்று சொல்கிறீர்கள்?

ஷாம்பூ போட்டு முடிந்ததும் அவர் முடி உலர்த்தியால் தலைமுடியைச் சீவி உலர்த்திக்கொண்டிருந்தார். அவர் வாய் மட்டுமே பேசியது, ஆனால் கைகள் வேறுயாருடையவோ கைகள்போலத் துரிதமாக வேலை செய்தன.

அப்படித்தான் என் சிற்றறிவுக்குப் படுகிறது. ஒரு மொழிக்குப் பாதுகாப்பு வேண்டும். ஒரு நாடுதான் அதைக் கொடுக்கமுடியும். உலகத்தில் 7000 மொழிகள் இருக்கின்றன என்று படித்திருக்கிறேன். அவற்றிலே 2000 மொழிகள் அழிவில் இருக்கின்றன. மீதியில், ஒரு நாடு பாதுகாப்புக் கொடுக்கமுடியாத மொழிகள் எல்லாம் ஒவ்வொன்றாக அழிவை நோக்கி நகர்கின்றன. அனைத்து மொழிகளையும் காப்பாற்ற முடியாவிட்டாலும் அவற்றை சேமிக்கவேண்டும். ஆவணப்படமாகவும், ஒலி வடிவமாகவும் கணிமைத் தொழில்நுட்பத்தில் பாதுகாக்கலாம். ஒரு மொழி அழிவது என்பது ஓர் இனம் அழிவதற்கு, ஒரு கலாச்சாரம் அழிவதற்கு சமம். கீழே விழுந்த முடியை திரும்பவும் ஒட்டமுடியாது. மொழியும் அப்படித்தான். பூமியிலிருந்து ஒரேயடியாக மறைந்துவிடும்.

நான் பேசமுடியாமல் அவரையே பார்த்தேன்.

‘ஒரு மொழியின் எதிர்காலத்தை அதைப் பேசும் மக்களின் எண்ணிக்கை தீர்மானிப்பதில்லை. அது போல அதன் வளர்ச்சிக்கும் எண்ணிக்கைக்கும் சம்பந்தமில்லை. ஒரு சின்னப் பரிசோதனை. உங்கள் நாட்டு சிங்கள மொழியின் கடந்த 50 வருட கால வளர்ச்சியுடன் தமிழ் மொழியின் ஐம்பது வருட வளர்ச்சியை ஒப்பிட்டுப் பாருங்கள். நான் சொல்வது உங்களுக்கே புரியும்.’

புதிய முடி அலங்காரத்தை நான் கண்ணாடியில் பார்த்தேன். திருப்தியாகவிருந்தது. காசாளரிடம் பணத்தைக் கட்டினேன். ஈராக்கிய நண்பரின் பெயரைக்கூட நான் அதுவரை தெரிந்திருக்கவில்லை. அது முக்கியமாகவும் படவில்லை.

எனக்குக் கவியின் வரிகள் ஞாபகத்துக்கு வந்தன.

நான் சாக்கடையில்
விழுந்து கிடக்கிறேன்.
என் கண்கள்
நட்சத்திரங்களில்.

நான் என் மொழி மீது வைத்த நம்பிக்கையைத் துறக்கத் தயாராகவில்லை.
-அ.முத்துலிங்கம்

நன்றி உயிர்மை
மேலும் படிக்க
http://www.uyirmmai.com/contentdetails.aspx?cid=62

சிறிலங்கா அரச படைகளின் கைகளில் தமது உயிர்களைப்பறிகொடுத்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு இவ்வறிக்கை சமர்ப்பணம்.வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் வெளியீடு - North East Secretariat on Human Rights
தமிழினப்படுகொலைகள் பாகம் 01 1956-2001 மென்நூல்
தமிழினப்படுகொலைகள் பாகம் 02 2002- மென்நூல்


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



5 comments:

வால்பையன் said...

அருமையான உரையாடல்!
பகிர்தமைக்கு நன்றி!

செல்லி said...

பிகேபி
எம் ஈழத்தில் இனப் படுகொலை தீவிரமாகி துயரத்தில் இருக்கும் எமக்காக இந்தப் பதிவு தந்த ஆதரவுக்கு மிக்க நன்றி

Anonymous said...

நன்றி அண்ணா உங்களின் எங்கள் மீதான ஆதங்கத்துக்கு
நாம் நம்பிக்கையோடு நடைபோடுகிறோம்.

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டினடிமை விலங்கு தெறிக்கும்

Rajendra Prasad, P said...

சுயநல அரசியல்வாதிகளிடமிருந்து நாம் இதைத்தான் எதிர்பார்க்க முடியும். ஆனால், கண்டிப்பாக இந்திய தமிழர்கள், தமிழீழத்தை தாயகமாக காணும் நாள் மலரும்.

அதிரை தங்க செல்வராஜன் said...

Dear PKP,

Its a very bad time, no word ,
Praying for our blood.

Adirai Thangaselvarajan

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்