அப்பாவுக்கு டிரான்ஸ்பர் வந்ததால் பாதியிலேயே விட்டுப்போன பால்ய நண்பன் சுதாகர் மற்றும் பத்துபடிக்கும் போது அருமையாய் அறிவியல் சொல்லிக்கொடுத்து அசத்திய "கஞ்சா" வாத்தியார், கணக்கோடு கொஞ்சம் வாழ்க்கை கணக்கையும் சொல்லிக்கொடுத்த ராஜாகிருஷ்ணன் சார், ஒரு நண்பன் போல அளவளாவி மின்னணுவியலை பயிற்றுவித்த ஜனார்த்தனன் சார், ஹார்டுவேர் கற்றுக் கொடுத்து வாழ்விலும் தூக்கிவிட்ட என் சக்கரவர்த்தி சார், ஹாயாக பைக்கில் கதீட்ரல் ரோடு, ஸ்டெர்லிங்ரோடு, மவுண்ட்ரோடு என என்னுடன் சுற்றிய கல்லூரி நண்பன் வெங்கட் - இவர்களிடமெல்லாம் இன்னொரு முறைகூட பேச ஆசை.உலகம் சிறியதாகிப்போயினும் இதுபோல சிலவற்றில் அது இன்னும் மான்ஸ்டர் தான். குச்சி ஐஸிலிருந்து அணுகுண்டுவரைக்கும் தயாரிக்க வழிசொல்லும் கூகிள் சுதாகரையோ வெங்கட்டையோ கண்டுபிடிக்க வழி சொல்ல மாட்டேன் என்கின்றான்.
மற்றவர்களாவது என்னை கண்டுபிடிக்க ஒரு எளிய வழி செய்யவேண்டுமென எனக்கு தோன்றியது. ஒரு வலைப்பக்கத்தை தொடங்கினேன். அதில் என் பெயர்,படித்த பள்ளி கல்லூரி பெயர், பிறந்த ஊர் , வளர்ந்த ஊர், வேலைசெய்த இடங்கள், நிறுவனங்கள் இன்னபிற என்னைபற்றிய பல கீ சொற்களையும் எழுதி என் மின்னஞ்சலையும் கைப்பேசி எண்ணையும் அதில் போட்டு வைத்தேன். கடைசியில் அது என்னமோ என் குடும்ப வலைத்தளம் போல் காட்சியளித்தது. கூகிள் தான் உஷார் பார்ட்டி ஆயிட்டுதே. ஒரு டிரில்லியன் பக்கங்களை அல்லவா படித்து வைத்திருக்கின்றான்.என் பக்கத்தையும் படித்திருக்கின்றான் போலும். சில மாதங்களுக்கு முன் சும்மாவாச்சும் சோதனைசெய்ய என் பெயரையும் என் ஊர் பெயரையும் சேர்த்து கூகிளில் டைப்பினேன். என்ன ஆச்சரியம் நான் உருவாக்கியிருந்த என் குடும்ப வலைத்தளம் முதல் பக்கத்தில் முதல் வரியிலேயே வந்தது.
போன வாரத்தில் ஒரு நாள் திடீரென ஒரு போன் கால்.
"ஹலோ என்னை யாருன்னு தெரியுதா?" ஒரு வித்தியாசமான குரல்.
ஒன்றும் புரியவில்லை "தெரியல்லையே" என்றேன் தயக்கமாக.
"நாயே...மறந்துட்டியா.நான் வெங்கட்டுடா" என்றான். எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.
"எப்படிடா என் நம்பரை கண்டுபிடிச்சே" என்றேன் நான்.
"அதுதான் கூகிள் கொட்டுதே" என்றான்
பழைய கல்லூரி நினைவுகளில் மூழ்கினோம்.மவுண்ட் ரோட்டில் டூவீலரில் பறந்த சுடிதாரை விரட்டி கடைசியில் வேகமிகுதியால் ஜெமினி பால திருப்பத்தில் விழுந்ததை இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகின்றது. சிரித்தோம். லோலோன்னு சுத்திய காலங்கள் அவை.
"மணிமாலா எப்படிடா இருக்கின்றாள்" என்றேன்.
"ஆங்...பொண்டாட்டி உதைப்பா" என்றான்.
டிஸ்கி:
இது மாதிரியான குடும்ப வலைத்தளங்களை உருவாக்கும் போது கொஞ்சம் கவனமாய் இருங்கள். அளவுக்கு அதிகமான தனிநபர் தகவல்களை அதில் போடுவதை தவிர்ப்பது நல்லது. அனாவசிய போட்டோக்களையும் தவிர்க்கலாம். அதிகபட்சமாய் சில சமயம் உங்கள் குடும்பம் பற்றிய நல்லது கெட்டதுகளை கூட official ஆக இணையம் வழி நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்கலாம். நிலவரங்களை சொல்லலாம். டைரக்சன்கள் கொடுக்கலாம்.இன்ன பிற செய்யலாம்.(அதென்ன டிஸ்கி என்கின்றீர்களா.Disclaimer-ஐ தான் நம்மாட்கள் சுருக்கமாக டிஸ்கி என்கின்றார்கள்.)
ஜான் பன்யன் "மோட்ச பிரயாணம்" இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Tamil Motcha Pirayaanam John Bunyan The Pilgrim's Progress pdf ebook Download. Right click and Save.Download
Download this post as PDF
1 comment:
தனிப்பட்ட குடும்ப விஷயங்கள் போடுவதில் பிரச்சனை தவிர்க்கமுடியாது தான் ஆனால் இது எங்கு நுழைந்து எங்கு வெளிப்படுமோ என்று பயமாகவும் இருக்கு.
Post a Comment