உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Tuesday, September 30, 2008

நிம்மதியாக வாழ்ந்திருந்தார்கள்

Netflix-ல் பழைய Outsourced திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தோம். நல்ல காமெடியாகவும் சிலநேரங்களில் வருத்தமாகவும் இருந்தது. சி.என்.என் தலைப்புச்செய்திகள் நினைவில் வந்து ஊசலாடிமறைந்தன. நம் ஊரில் கால்சென்டர் என்ற உடனே அல்லது மென்பொருள் நபர் என்ற உடனே ஏனோ குடித்து கும்மாளம் அடிப்பவர்கள் என்று பொருளாகிவிட்டது. எத்தனை அடித்தட்டு குடும்பங்களுக்கு அது வயிறாற உணவிட்டது, படித்து கிழித்து என்னத்தை சாதிக்கப் போகின்றோம் என்றிருந்த எத்தனை பட்டதாரிகளுக்கு அது வேலைவாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தது இவற்றையெல்லாம் மறந்து போகின்றோம். கையில் காசுவந்ததும் கடந்து வந்த வழிகளை அந்த இளைஞர்களும் தான் மறந்து போனார்கள். இங்கே ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் என எப்போவாவது உண்ணப்படுபவையே இந்தியாவில் எஞ்சினியரிங் காலேஜ் கேபட்டீரியாக்களில் மெனுவாகின. இப்போது இந்த இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்கு அபாயம் என்றதும் இன்னொரு கூட்டம் சந்தோஷப்படுகின்றது. அமெரிக்க கோபால்களுக்கு இந்தியாவில் பெண்கொடுக்க தயங்குகிறார்களாம். வால்ஸ்டிரீட்டின் நிலமை ஆந்திராவின் கடைகோடி பாபுக்களுக்கும் தெரிந்திருக்கின்றது. எலக்ட்ரானிக் மீடியாக்களின் அபார வீச்சு அசாதாரணமே.

எனினும் இந்த இளைஞர்களின் கதை சற்று வித்தியாசம் தான். பல சோதனைகளிலும் முடங்கிப்போகாமல் கொண்டாடுவதற்கு சமமான பல இரவுகள் Pdf-களிலும் புத்தகங்களிலும் மூழ்கிக்கிடந்திருக்கின்றார்கள். கல்விச்செல்வம் அழியாததென்பார்கள் ஆனாலும் கணிணிக் கல்வியோ சற்று வித்தியாசம்.நேற்று கற்றது இன்றைக்கு காணாமல் போயிருக்கும். இதனாலேயே Trainsignal-களையும் CBTnuggets-களையும் ISO, BIN, CCD இமேஜ்களாக இறக்கி அதை Virtual CD Drive-ல் ஏற்றி ஓட விட்டு வேலைவாய்ப்பு பந்தயத்தில் முந்தி ஓட தினமும் ஏதாவது அவர்களுக்கு கற்க வேண்டியிருக்கின்றது.Oracle VM, Cloud Computing, VMware VMmark, Microsoft Dynamics, xajax ,JsonML, Near Field Communication என இப்படி மார்க்கெட்டில் வர வர எல்லாமே கொஞ்சம் தெரிந்திருக்க வேண்டும். இண்டர்வியூ என்கின்ற பெயரில் வட்டமேஜை மூளை டார்ச்சர் வேறு. இத்தனையும் தாண்டி நுழையும் வேலையில் ஒரு நிரந்தரத்தையும் எதிர்பார்க்கமுடியாது. தினசரி தலைப்புச்செய்திகள் சர்வசாதாரணமாக அவனுக்கு பிங்க் ஸ்லிப் கொடுத்து விட்டுப் போகும்.

வீட்டுக்கு வந்து தபால் கொடுத்துவிட்டு அப்படியே ஆற அமர்ந்து மோர் சாப்பிட்டுவிட்டு போகும் அந்த கால தபால்காரர்.
பளீர் வேட்டியில் ரேலி சைக்கிளில் அம்சமாக வந்திறங்கி அறிவியல் பாடம் எடுத்துப்போகும் சுப்பிரமணிய வாத்தியார்.
அவ்வப்போது சிப்பாய்களை சுமந்து சாரை சாரையாக ஊரைக் கடந்து செல்லும் இராணுவ வண்டிகள்.
பாட்டி அடிக்கடி சொல்லிச் சொல்லி பயமுறுத்தும் பாம்பு வைரம் கக்கிய கதை.
வாரந்தவறாமல் நடுச்சாமத்தில் வந்து கிடுகிடுப்பிக் கொண்டு போகும் இராப்பாடி.

அந்தகாலத்தில் எல்லோரும் நிம்மதியாக வாழ்ந்தார்கள் போலிருக்கின்றது.

சம்பந்தமேயில்லாமல் ஒரு தகவல்: பிரபல IMDB யும் இப்பொழுது முழுநீள ஹாலிவுட் திரைப்படங்களையும் ஆங்கில டிவி தொடர்களையும் இலவசமாய் ஆன்லைனில் வழங்குகின்றார்கள்.
http://www.imdb.com/features/video/



பற்றற்றவர்களாக இருங்கள்.
அதற்காக காட்டுக்குள் சென்றுவிடாதீர்கள்
-மாத்யூ கிரீன்

வாஸ்துசாஸ்திரம் பற்றிய மென்புத்தகம் தமிழில்.Vaasthu Saasthiram ebook in thamil pdf download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Friday, September 26, 2008

பிரபல மென்பொருட்களின் பிறப்பிடங்கள்

ரஷ்யாவிலிருந்து பிரபல ஆண்டிவைரஸ் Kaspersky

இஸ்ரேலிலிருந்து பிரபல ஃபயர்வால் Checkpoint

ஜெர்மனியிலிருந்து பிரபல ERP மென்பொருள் SAP

இந்தியாவிலிருந்து பிரபல அக்கவுண்டிங் மென்பொருள் Tally

அமெரிக்காவிலிருந்து பிரபல வின்டோஸ் புகழ் Microsoft

இங்கிலாந்திலிருந்து பிரபல கைப்பேசி செயலி Symbian

பின்லாந்திலிருந்து பிரபல ஆண்டிவைரஸ் F-Secure

ஜப்பானிலிருந்து பிரபல ஆண்டிவைரஸ் Trend Micro

சிங்கப்பூரிலிருந்து பிரபல வீடியோ மென்பொருள் muvee

பிரான்சிலிருந்து பிரபல ERP மென்பொருள் Business Objects

நார்வேயிலிருந்து பிரபல பிரவுசர் மென்பொருள் Opera

செக் குடியரசுவிலிருந்து பிரபல ஆண்டிவைரஸ் AVG

கனடாவிலிருந்து பிரபல கோரல்டிரா புகழ் Corel

மால்டாவிலிருந்து பிரபல GFi




நண்பனே!
நாளைய மழை அறியும் எறும்பாய் இரு
நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும்
காளானாய் இராதே!

சுஜாதாவின் "என் இனிய இயந்திரா" அறிவியல் புதினம் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Sujatha En Eniya Eyandhira Science Fiction in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Thursday, September 25, 2008

இந்த செப்டம்பர் 11

அந்த செப்டம்பர் 11-யை விட இந்த செப்டம்பர் 11 அமெரிக்காவை ரொம்பவே அசைத்து போட்டிருக்கின்றது. எதிர்கட்சி முக்கிய புள்ளிகளும் ஆளும்கட்சி முக்கிய புள்ளிகளும் வித்தியாசமில்லாமல் ஒரே அறையில் சுற்றி அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்கின்றார்கள். 700 பில்லியன் டாலர்களை அரசு போடாவிட்டால் சொல்லப்படும் பின்விளைவுகள் அச்சமூட்டுபவையாய் இருக்கின்றன. அப்படியே அந்த டாலர்களை அரசு போட்டாலும் அந்த எல்லா சுமையும் சாதாரணமக்கள் மேல் தான் வரிச்சுமையாய் வந்து விழும். இந்த வருடம் வரி ரிபேட் கொடுத்ததுக்கு வாட்டமாக அடுத்த வருடம் இரண்டுமடங்காய் பிடுங்கப்படலாம். லாபமாய் கம்பனிகள் ஓடும் போது மட்டும் அதில் வரும் லாபம் தனியாருக்குப் போகும். அதுவே நஷ்டத்தில் ஓடினால் அச்சுமையை பொதுமக்கள்மேல் சுமத்துவதாவென கடுப்பில் இருக்கின்றது ஒரு கூட்டம்.

இதற்கிடையே துணைஅதிபருக்கு போட்டியிடும் சாரா பாலின் அம்மையாரின் யாகூ மெயில் ஐடி ஹேக்செய்யபட்டதில் ஐற்றி(IT) துறைகாரர்கள் புதிதாய் பாடம் கற்றிருக்கிறார்கள். அந்த 20 வயது ஹேக்கர் பையன் ரொம்ப ஒன்றும் மெனக்கடவில்லை. பாலின் தனது மின்னஞ்சலாக யாகூ அக்கவுண்டான gov.sarah@yahoo.com பயன்படுத்துகிறார் என தெரிந்ததும் அவன் யாகூமெயிலின் "Forgot Your Password" ஐ கிளிக்கி அது கேட்கும் கேள்விகளுக்கு விடை அளிக்க முயன்றிருக்கிறான். அது கேட்கும் பெரும்பாலான கேள்விகளுக்கு பதில்களான அவர் பிறந்தநாள், அவர் வசிக்கும் இட Postal zip code போன்றன விக்கிபீடியாவிலும் கூகிளிலும் தேடி எடுத்துக்கொண்டான். “where did you meet your spouse?” என்ற கேள்விக்கு மட்டும் விடையளிக்க கொஞ்சம் கஷ்டப்பட்டிருக்கிறான. ஆனாலும் அங்கும் இங்கும் கூகிளில் தேடி (நம்மாட்கள் தான் பேட்டிகளில் இதையெல்லாம் ஒப்பித்துவிடுகிறார்களே) கடைசியில் கண்டுபிடித்து விட்டான். பாப்கார்ன் என்று அம்மையாரின் அக்கவுண்ட் பாஸ்வேர்டை ரீசெட் செய்துவிட்டு குளிக்கப்போய்விட்டானாம். பாலினின் சில குடும்ப படங்களும் சில தனிப்பட்ட மெயில்களும் அடுத்தநாள் பொதுஜன காட்சிக்கு வந்தன.நல்லவேளையாய் விவகாரமாய் எதுவும் கிட்டவில்லை. இப்படி யாகூவில் எளிதாய் கடவுசொல் திருடப்பட ஜிமெயிலின் பாதுகாப்பு பரவாயில்லை என்கின்றார்கள்.



எல்லோரும் தம்மை விட்டு
விட்டு வேறுயாரையோ
சீர்திருத்த முயலுகிறார்கள்
- தாகூர்

சோசியல் நெட்வொர்க்கிங் பெருத்த இக்காலத்தில் பெரும்பாலானோரின் மேற்சொன்ன தனிப்பட்ட தகவல்கள் மற்றும் "படித்த பள்ளி" "வேலைசெய்த இடங்கள்" "அம்மா பெயர்" ஆகிய தகவல்கள் ஆன்லைன் ப்ரொபைலில் எளிதாய் கிடைக்கின்றது. இதைப்போய் எப்படி Secret question ஆக கருதுவது?

இப்படி பயனர் பற்றிய எளிய "ரகசியகேள்விகளுக்கான" விடைகள் ஆன்லைனிலேயே கிடைப்பதால் இத்தகைய சில்லி கேள்விகளை கேட்பதற்கு பதிலாக இந்த சிஸ்டத்தையே மொத்தமாய் மாற்றவேண்டும் என்கின்றார்கள் ஐற்றி வல்லுனர்கள். ஒரு கேள்விக்கு பதில் பல கேள்விகள் கேட்டால் என்ன? பொதுவாக யாரும் எளிதில் வெளியில் சொல்ல விரும்பாத விருப்பு வெறுப்புகளை உணர்வுகளை ரகசியகேள்விகளாக்கலாமோவென ஆலோசிக்கின்றார்கள். இப்படி பார்க்கப்போனால் ஐற்றி செக்யூரிட்டி இன்னும் ரொம்பதூரம் போகவேண்டியிருக்கின்றது.

இந்தியன் ரயில்வேஸ் டைம்டேபிள் 2008 இங்கே ஆங்கிலத்தில் மென் புத்தகமாக. Indian Railways Timetable 2008 in English pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Wednesday, September 24, 2008

எதாவது ஐடியா இருக்குதா

கால்நடையாய் மைல்கணக்கில் தூரம் போய் குடத்தில் குடிநீர் மொண்டு தலையில் சுமந்துகொண்டுவரும் பெண்களை பார்த்திருப்போம். கலகலவென பேசிக்கொண்டே அந்த குமரிகள் குடிநீர் சுமந்து கொண்டு வந்தாலும் அதுஅதற்கான வேதனைகளும் வலிகளும் இருக்கத்தான் செய்யும்.படத்தில் நீங்கள் காணும் அருமையான Hippo water roller எனும் ஐடியா யாருக்கோ உதித்தது. இதனால் 24 கேலன் தண்ணீரை நிசாரமாக ஒருவர் இழுத்துக்கொண்டு அல்லது தள்ளிக்கொண்டு வரமுடியுமாம்.தென் ஆப்ரிக்காவில் இது மிகப் பிரபலம்.

இப்படி நாலுபேருக்கு உபயோகமாயிருக்கும் எதாவது ஒரு ஐடியா உங்களிடம் இருக்கின்றதா? உடனே அதை கூகிளுக்கு எழுதிப்போடுங்கள். பத்துமில்லியன் டாலர்களை பரிசாக வழங்க கூகிள் காத்திருக்கின்றான். அதன் பத்தாவது பிறந்த நாளை முன்னிட்டு கூகிள்வாலாக்கள் இப்படி ஒரு அதிரடி அறிவிப்பை விட்டிருக்கின்றார்கள். எந்த விதமான யோசனையாக இருந்தாலும் பரவாயில்லை. நாலுபேருக்கு அந்த யோசனையால் நல்லது நடக்கணும் அது தான் ஒரே கண்டிசன். இதற்காகவே http://www.project10tothe100.com எனும் தளத்தையும் தொடக்கியிருக்கின்றார்கள்."May Those Who Help The Most Win" இது தான் அதன் தாரக மந்திரம்.




செயல் புரியாத மனிதனுக்கு
தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது
- சபாகிளிஸ்
உங்கள் ஐடியாக்களை கீழ்க்கண்ட சுட்டியில் அக்டோபர் 20ம் திகதிக்குள் Submit your idea தட்டி தள்ளிவிடுங்கள். சொல்லமுடியாது. உங்களுக்கு ஜுஜுபியாக தோன்றும் அந்த ஐடியா கூட அநேகருக்குப் பலனாகிப்போகலாம்.

மறந்துடாதீங்க பத்து மில்லியன் டாலராக்கும் பரிசு.

Updated: நண்பர் ஜோசப் பால்ராஜ் அவர்களின் பின்னூட்டத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அவருக்கு என் நன்றிகள்.

"பிகேபி அண்ணா,
நானும் ஒரு பதிவு இதை குறித்து எழுதினேன். நண்பர் ஒருவர் நீங்கள் ஏற்கனவே எழுதியுள்ள இந்த பதிவை குறிப்பிட்டார்.

உங்கள் பதிவில் பரிசு 10 மில்லியன் டாலர் என்ற தவறான தகவலை தெரிவித்துள்ளீர்கள். சிறந்த யோசனையாக தேர்ந்தெடுக்கப்படும் திட்டம் 10 மில்லியன் செலவில் செயல்படுத்தப்படும் என்பதே சரி. யோசனை தெரிவிப்பவருக்கு பரிசு எதுவும் கிடையாது. அவர்களது FAQல் குறிப்பிட்டுள்ளதை இங்கு ஒட்டியுள்ளேன்.
Q: What do I get if my idea is chosen?
A: You get good karma and the satisfaction of knowing that your idea might truly help a lot of people.

எனது பதிவில் நான் தெரிவித்துள்ள யோசனையையும் குறிப்பிட்டுள்ளேன். http://maraneri.blogspot.com/2008/09/blog-post_25.html படித்துவிட்டு பின்னூட்டமிடுங்கள்."


ரமணிச்சந்திரன் புதினம் "பானுமதி" இங்கே தமிழில் மென் புத்தகமாக. Ramanichandran novel Baanumathi in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Tuesday, September 23, 2008

வெப் உலக ரெக்கார்டுகள்

யூடியூபின் மிக நீளமான வீடியோ - ஏறக்குறைய நாலரைமணிநேர வீடியோ
http://www.youtube.com/watch?v=Ct8nZ6eTTiY

யூடியூபின் மிக குறுகலான வீடியோ - .01 நொடி வீடியோ
http://www.youtube.com/watch?v=9uDgJ9_H0gg

இணையத்தின் மிகச் சிறிய வலைமனை
http://www.guimp.com

இணையத்தின் மிக உயரமான வலைமனை
http://worlds-highest-website.com

உலகின் முதல் .com இணையதள டொமைன் பெயர் (மார்ச் 15 1985)
http://www.symbolics.com

மிக குறுகிய இணையதள டொமைன் பெயர். வாடிகனின் வெப்சைட்.
http://www.va

மிக நீளமான இணையதள டொமைன் பெயர்.இது நார்த் வேல்ஸிலுள்ள ஒரு கிராமத்தின் பெயராம்.
http://www.llanfairpwllgwyngyllgogerychwyrndrobwyll-llantysiliogogogoch.com




வாழ்வது
சிலகாலம்
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!


உலகின் பெரிய domain name registrar (30.7 மில்லியன் டொமைன்பெயர்கள்)
http://www.godaddy.com

உலகின் முதல் ஆன்லைன் செய்தித்தாள் மே 1993, the Tech published by students from MIT, launched.
http://www-tech.mit.edu

24 மணிநேரத்தில் மிக அதிக எண்ணிக்கையில் இறக்கம் செய்யப்பட்ட மென்பொருள் ஃபயர்பாக்ஸ் 3 (ஏறக்குறைய 8 மில்லியன் பதிவிறக்கங்கள்)

அதிக மின்னஞ்சல் கணக்குகளை வைத்திருப்பவர் Sujit Ghosh.இவர் தனக்கென 5555 ஈமெயில் அக்கவுண்ட்களை வைத்திருக்கிறாராம். Kolkataismycity1@rediffmail.com முதல் Kolkataismycity5555@rediffmail.com வரை.

"ஓடி விளையாடு பாப்பா" குட்டீஸ்களின் பிளாஷ் வீடியோ பாடல். "Oodi vilaiyaadu paapa" kids flash video song Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Wednesday, September 17, 2008

ஒரு துகளை தேடி

நூறு ஆண்டுகளுக்கு முன்பு எலக்ட்ரான் எனும் துகளை கண்டுபிடித்தார்கள். அதை ஓட விட்டு பின்பு அதனை மின்சாரம் என்றார்கள். இன்றைய நவ நாகரீக மின்னுலகம் மலர்ந்தது.

இதுபோல இன்னொரு துகளும் கட்டாயம் இருக்கவேண்டும். அதை நாம் எப்படியாவது கண்டு பிடித்தேயாகவேண்டும். அதை நாம் கண்டுபிடிக்காததால் தான் இன்னும் அநேக மர்மங்கள் உலகில் நிலவுகின்றன என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள் CERN விஞ்ஞானிகள். நாம் வாழும் இந்த பூமிக்கு புவி ஈர்ப்புவிசை எப்படி வந்தது? அதற்காக காரணம் பூமியின் நிறை என்றால் நிறை என்றால் என்ன? நமக்கு ஒளி தெரியும், அது போகும் வேகமும் தெரியும் அப்படியென்றால் இருளென்றால் என்ன? இப்படி அநேக கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லையாம். பலசமயங்களில் Higgs boson-னு ஒரு துகள் இருப்பதாக தியரிட்டிக்கலாக கணக்கில் போட்டு காலத்தை ஓட்டினாலும் அந்த மகா "கடவுள் துகளை" எப்படியும் பிராக்டிக்கலாக பார்த்துவிடுவது என்ற நோக்கத்தில் தான் ஜெனிவா அருகே அந்த மகாபெரிய எந்திரத்தை நிர்மாணித்திருக்கின்றார்கள். கடவுளுக்கே கொஞ்சம் திக்திக்கென்றுதான் இருக்கும்."பாவிப்பசங்க எல்லாத்தையும் கண்டுபிடிச்சிடுவாங்களோ"

என்னத்தைக் கண்டுபிடிக்கிறது முதலில் உங்கள் கணிணி நெட்வொர்க்கை பாதுகாப்பா வைக்க கத்துக்கோங்கடாவென ஒருஹேக்கர் கும்பல் ஏற்கனவே LHC-யின் கணிணி நெட்வொர்க்கை ஹேக்கி அங்கே ""We are 2600 - don't mess with us"" என கொடியும் நாட்டிவிட்டு வந்திருக்கின்றார்கள்.விஞ்ஞானிகள் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள். நல்லகாலம் அடுத்து ஒரு அடி வைத்திருந்தால் அந்த ராட்சச எந்திரத்தின் கணிணி அறையில் நுழைந்திருப்பார்களாம். போதுமடா சாமி என இதுவரைக்கும் ஆன்லைனில் வைத்திருந்த அந்த நெட்வொர்க்கை ஆப்லைனாக்கி விட்டார்கள். அதனால் அவர்கள் இணைய தளமான www.cmsmon.cern.ch இப்போது டவுன்.இத்தனைக்கும் அவர்கள் ஓட்டுவது என்னமோ Scientific Linux ஆம்.
உங்களுக்கு தெரியுமா CERN தான் இன்டர்நெட்டின் பிறப்பிடமும் கூட.நிற்க.

ஏற்கனவே நாம் செய்திருக்கும் அட்டூழியத்தில் பூமி தாங்கமாட்டேங்குது. போகுமிடமெல்லாம் நிலஅதிர்ச்சி, சுனாமி, சூறாவளி, பெருவெள்ளம் அப்படி இப்படினு அது தள்ளாடிக்கொண்டிருக்க இது தேவையா? தப்பி தவறி அது ஒரு "கருந்துளை"யை உண்டாக்கினால் இந்த பூமி தாங்காதே என்பது சிலரின் கருத்து. பிளாக் ஹோல் எனப்படும் இந்த கருந்துளைகள் "bottom less pit" அதாவது அடிவாரமே இல்லாத துளை போன்றது. இதன் ஈர்ப்பு சக்தியும் மிக மிக அதிகம். அந்த பக்கமாய் போகும் ஒளிக்கதிரை கூட இது இழுத்து சாப்பிட்டுவிடுமாம். இந்த மாதிரி ஒரு பிளாக் ஹோல் உருவாகி அது இன்னும் நமக்கு தொல்லை தர அது நமக்கு தேவையாவென ஒரு கும்பல் காட்டு கத்து கத்துகின்றார்கள்.

அட போங்கையா இதுமட்டும் சக்ஸஸ் ஆகி "அந்த" ரகசியத்தை நாங்கள் கண்டுபிடித்துவிட்டால் மனுஷனுக்கு சாவே வராமலிருக்கும் சூட்சுமம் வரைக்கும் நாங்கள் கண்டுபிடித்து விடுவோம். ஏற்கனவே டாலருடன் போட்டி போட்டு முன்னேறிக் கொண்டிருக்கும் யூரோ பிராந்தியம் தான் இனி அடுத்த வல்லரசுவென இப்பக்கம் கொண்டாடுகின்றார்கள்.

இப்ப நடப்பது வெறும் வெள்ளோட்டம் தான். அடுத்த ஸ்ப்ரிங்கில் தான் நிஜ விளையாட்டு ஆரம்பமாகின்றது.

"All should leave Geneva"-ன்னு நம்ம நாஸ்ட்ரொடாமஸ் (Nostradamus) தாத்தா முன்னமேயே எதுக்கு சொல்லி வச்சிட்டு போனாருனுதான் தெரியலையே.

(இதெல்லாம் ஒரு சாமானியனின் கருத்துக்கள்.தவறுகள் இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் நண்பர்களே)

சேரன் கவிதைகள் ஒரு நூறு "நீங்கள் இப்பொழுது இறங்கும் ஆறு" இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Cheran kavithaikal "Nee Ippodhu Irangum Aaru" in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Monday, September 15, 2008

வீழும் கோபுரங்கள்

டிவி செய்திகளில் நியூயார்க் நகர இரட்டைகோபுரங்கள் விமானங்களால் தகர்க்கப்பட்டு புகை சூழ அவை விழுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் கோபுரங்கள் அப்படியே நின்றிருக்க உள்ளிருக்கும் பில்லியன் டாலர் நிறுவனங்கள் பொலா பொலாவென உதிர்வதை பார்த்திருக்கின்றீர்களா? இப்போதெல்லாம் வால் ஸ்டிரீட்டில் இது வாரம் தோறும் நிகழும் நிகழ்வாகிவிட்டது. விண்மீன்கள் விழுவதைப்போல நேற்று வரை ஜொலித்துக் கொண்டிருந்த நிதி நிறுவனங்கள் இப்போது காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. உதாரணத்துக்கு சொல்ல ஒன்றா இரண்டா?. அருமையான மென்பொருள் தீர்வுகளை வழங்க நம் மென்பொருள் வல்லுனர்கள் தயார்தாம், ஆனால் அதனை பயன்படுத்த அல்லது பயன்படுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது. இதனால் பெஸிமிஸ்டாய் சொன்னால் டெக்னாலஜி நிறுவனங்களுக்கும் தொலைவு அத்தனை வெளிச்சமாயில்லை.

1929 ஆம் ஆண்டுகளில் எட்கர் கேய்ஸ் (Edgar Cayce) என்பவர் தூங்கியவாறே வரும் காலத்தில் நடக்கப்போவதை புட்டு புட்டு வைத்துக்கொண்டிருந்தார். மிகப்பெரிய நிதிச்சிக்கல் ஒன்று வரப்போகின்றது. (a great disturbance in financial circles) அவரவர் பணத்தை மூட்டை கட்டிக்கொண்டு பத்திரமாக வைத்திருங்கள் என எல்லாருக்கும் அபய குரல் கொடுத்தார். நியூயார்க்கில் பங்கு வர்த்தகம் உச்சக்கட்டத்தில் இருந்த காலம் அது. யாரும் அவரை நம்பத்தயாராயில்லை. ஆனால் நடந்தது என்ன? அவர் சொன்ன மாதிரியே ஆறே மாததில் நியூயார்க் பங்கு சந்தை மொத்தமாய் வீழ்ந்தது. மிகக்கொடூரமான Great Depression எனப்பட்ட உலகளாவிய பொருளாதார மந்த நிலைமைக்கு உலகம் தள்ளப்பட்டது. பெரும்பாலான மக்கள் வேலை இழந்தனர். வங்கிகளில் போடப்பட்டிருந்த தங்கள் பணங்கள் திரும்ப கிடைக்கவில்லை. சோற்றுக்காக வீடு கார் எல்லாவற்றையும் விற்கும் நிலமைக்கு ஆளாயினர். பசியும் பட்டினியும் எங்கும் நிலவியது. வாழ்வே சூன்யமாயிற்று இனிமேல் எழும்பவே முடியாதுவென்றிருந்த நிலையில் இந்த "மகா மந்த நிலமை"யிலிருந்து உலகை எழுப்பிவிட்டது எது தெரியுமா? சொன்னால் நம்பமாட்டீர்கள். இரண்டாம் உலகப்போர் தான். போர் வந்ததும் அதற்கான ஆயத்தங்கள் செய்ய, தளவாடங்கள் செய்ய அது இதுவென ஏகபட்ட வேலைவாய்ப்புகள் மீண்டும் உருவாகின. மக்களிடையே பணம் புரளத்தொடங்கியது. இப்படி கோடிக்கணக்கில் உயிர்களை கொள்ளை கொண்ட ஒரு உலகப்போரினால் உலகம் சகஜநிலமைக்குத் திரும்பியது.

அது மட்டுமல்லாமல் முதலாம் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போர் வரப்போவது பற்றியும் எட்கர் கேய்ஸ் முன்னமே சொல்லியிருந்தாராம். 2004ஆம் ஆண்டு இந்தியாவை தாக்கிய சுனாமியையும் எட்கர் கேய்ஸ் ""Watch for [strife] . . . in the Indian Ocean... " என 1941-லேயே சொன்னதாக சொல்கின்றார்கள்.

இப்படி நடக்கப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே கூறும் அபூர்வ மனித சக்தியை Extrasensory perception (ESP) என்கின்றார்கள். ஆனாலும் விஞ்ஞானிகள் இன்னும் அதை நம்பத்தயாராயில்லை. அதற்கும் புதிதாய் அவர்கள் ஏதாவது துகள்கள் கண்டுபிடிக்கவேண்டும்.

1945ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று எட்கர் கேய்ஸ் தனது உடல் இந்தமாதம் ஐந்தாம் தியதி அடக்கம் செய்யப்படும் என உலகுக்கு முன்அறிவித்தார். அப்படியே நடந்தது.

எட்டாம் வகுப்பு அறநெறிக் கதைகள் இங்கே சிறு மென் புத்தகமாக. 8th standard Araneri Kathaikal in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Sunday, September 14, 2008

மேலும் SIP

கடந்த பதிவில் சகாய விலையில் SIP கால்கள் பற்றி பேசியிருந்தேன். இதைப் படித்த பல நண்பர்களும் இன்னும் சில சீப்பான SIP சேவை கொடுப்பவர்களை அறிமுகப்படுத்தியிருந்தார்கள். வானளாவிய தொலைப்பேசி கட்டணத்தால் அதிகம் பாதிக்கப்படுவது நம் வளைகுடாவாழ் நண்பர்கள் தான். டெக்னாலஜிகள் பலதாய் வளர்ந்தும் மனம் விட்டு ஆத்தலாய் பேசும் அளவுக்கு அங்கு கட்டணங்கள் இல்லை. பெட்ரோலுக்கு அடுத்த படியாக அதிகபட்ச வருமானம் கொடுப்பது இவர்களின் தொலைப்பேசி இலாகாக்களோவென சில சமயம் தோன்றும். இதனால் இணையம் பரீட்சயமான காசுள்ள பலரும் இது போன்ற VOIP மென்பொருள்களிடம் தஞ்சம் அடைந்து ஆசுவாசமாக நம்மூருக்கு பேசுவர். கொஞ்சமாய் சம்பாதிக்கும் விளிம்பு நிலை மனிதர்களுக்கு இன்னமும் இணையம் தூரம் தான். இதில் VOIP அவர்களுக்கு எக்கடை சரக்கு.

இதுபோன்ற நண்பர்கள் ஏதாவதொரு இணையநிலையம் சென்று கணிணியில் நிறுவப்பட்ட Softphone பயன்படுத்தி இந்திய தரை அல்லது கைப்பேசிகளுக்கு இலகுகட்டணத்தில் வெகுநேரம் பேசலாம். கீழ்கண்ட இணையதளங்கள் இது போன்ற Softphone மென்பொருளை இலவச இறக்கத்துக்கு கொடுக்கின்றார்கள்.

http://www.freecall.com
http://www.intervoip.com
http://www.smsdiscount.com

இதுபோன்ற பல நல்ல டிப்ஸ்களை வழங்கி இந்த வலைப்பதிவினை மேலும் மேலும் பயனுள்ள தாக்கும் நண்பர்கள் Giri மற்றும் Mohamed IQbal Bukari போன்றோர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.நிற்க.

உங்கள் கணிணியிலிருந்து கைப்பேசிக்கு கோப்புகளை இணையம் வழி அப்லோடு செய்ய கீழ்கண்ட இணையதளம் உதவுகின்றது.http://beam-it-up-scotty.com. முயன்று பார்க்கலாம்.

இதுபோல உங்கள் கணிணியிலுள்ள பலவித கோப்புகளை ஐஃபோனுக்கு மாற்ற "App Store"-ல் "Air Sharing" என்று ஒரு பயன்பாடு இப்போதைக்கு இலவசமாக கிடைக்கின்றது. இது தான் இன்றைய டாப் ஐபோன் பயன்பாடு. ஐபோன் வைத்திருப்பீர்களானால் உடனடியாக உங்கள் ஐபோனில் இதை நிறுவிவிடுங்கள். சீக்கிரத்தில் இதை விலைக்கு கிடைக்கும்படி செய்து விடுவார்கள். இதன் மூலம் பிரயாணத்தில் படிக்க அநேக pdf கோப்புகளை எனது ஐஃபோனில் ஏற்றம் செய்து வைத்துள்ளேன். Loved it.

ரமணி சந்திரன் "தேவி" புதினம் இங்கே தமிழில் மென் புத்தகமாக. RamaniChanthiran Devi novel in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Wednesday, September 10, 2008

சகாயவிலையில் SIP கால்கள்

இப்பொழுதும் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு கால் செய்ய "ரிலையன்ஸ் இன்டியாக்கால்" இன்னும் அநியாய கட்டணமே வசூலித்துக் கொண்டிருக் கின்றார்கள். நிமிடத்திற்கு 7.9¢.அதுவும் ஒவ்வொரு முறையும் ஐ.எஸ்.டி முழுநம்பரையும் நாம் டைப் செய்ய வேண்டும்.

ரெப்டெல்லை பற்றி கேள்விப்பட்டவுடன் பின்பு அதற்கு தாவலானேன். இவர்கள் நிமிடத்திற்கு 5.6¢ வசூலிக்கின்றார்கள். ஒவ்வொரு இந்திய நம்பருக்கும் ஒரு அமெரிக்க லோக்கல் போன் நம்பரை இவர்கள் நியமித்து நமக்கு தந்து விடுவதால் போன் Contacts-யிலிருந்து நேரடியாகவே அந்த லோக்கல் நம்பர் டையல் செய்து இந்தியா பேசலாம்.இப்படி சமீபத்தில் டெல்லி நண்பன் ஒருவனையும் துபாய் நண்பன் ஒருவனையும் Conference call-ல் இழுத்து ரொம்பநேரம் பேசிக்கொண்டிருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை.

ஆனால் அயல்நாட்டிலும் இந்தியாவிலும் அகலப்பட்டை இணைய இணைப்புகள் வைத்திருபவர்களுக்கு கொண்டாட்டம் தான். விடிய விடிய நயா பைசா செலவில்லாமல் கதைத்துக்கொண்டே இருக்க முடியும். இன்றைய நிலையில் இந்தியாவில் நகர்ப்புறங்களில் மட்டுமே அகலப்பட்டை வசதிகள் உள்ளன. நகரத்தை விட்டு தூரச்செல்லச் செல்ல அகலப்பட்டை கிடைப்பது அரிதாயிருக்கின்றது.

இது போன்று புறநகரின் ஒரு மூலையில் இணைய இணைப்பின்றி மாட்டிக்கொண்டோரிடம் பேசவும் ஒரு விஓஐபி(VOIP) தீர்வு இருக்கின்றது. உங்களுக்கு தேவை இங்கு அக்கரை சீமையில் இன்டர்நெட் டேட்டா பிளானுடன் கூடிய ஒரு நல்ல WiFi கைப்பேசியும் அதில் fring அல்லது Gizmo போன்றதொரு VOIP மென்பொருளும். Callcentric போன்ற ஏதாவதொரு சகாயவிலை SIP சேவை தருபவர்களிடம் ஒரு கணக்கு ஆரம்பித்து அவர்கள் கொடுக்கும் செட்டிங்குகளை அந்த மென்பொருளில் செய்துவிட்டால் நிமிடத்திற்கு $0.0715 கட்டணத்தில் இந்திய தரை தொலைபேசிகளுக்கும் நிமிடத்திற்கு $0.0649 கட்டணத்தில் இந்திய கைபேசிகளுக்கும் நாம் பேசலாம்.

உங்கள் போன் மாடலுக்குத் தகுந்த fring அல்லது Gizmo மென்பொருளை இறக்கம் செய்து உங்கள் கைப்பேசியில் நிறுவவேண்டும். Callcentric தரும் SIP Proxy settings-களையும் இன்னபிற செட்டிங்குகளையும் சரியாய் அதில் குறிக்க வேண்டும். அப்புறமென்ன இன்னும் சீப்பாக நம் கிராமங்களுக்கும் நாம் பேசலாம்.

சீக்கிரத்தில் நம் ஊர்புறங்களுக்கும் கூட இந்த இணையம் வரும். அப்பொழுது உலகம் கணக்குவழக்கின்றி இன்னும் சுருங்கிப் போயிருக்கும்.

கல்கியின் "தியாக பூமி" இங்கே தமிழில் மென் புத்தகமாக.Kalki Thiyaaga Poomi in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Monday, September 08, 2008

ஐந்து SMSக்கு கிலோ அரிசி

கட்டுமானத்துறையில் இருப்பார்கள். ஆனாலும் கணிணியில் அத்துபடியாய் இருப்பர். மருத்துவத்துறையில் இருப்பார்கள் அதனாலென்ன கணிணியை பிரித்துபோட்டு அவர்கள் மேய்ந்துவிடுவார்கள். "பேசாமல் நீர் கம்ப்யூட்டர் இஞ்சினியராகவே போயிருக்கலாம். இன்னும் கொஞ்சம் காசாவது கெடைச்சிருக்கும்"னு சகதர்மினி முணுமுணுப்பதும் கேட்காமல் USB வயர்களும் சிடிக்களும் குவிந்திருக்க இவர் கணிப்பொறியிலேயே கதியாய் கிடப்பார். எல்லாருக்குமே ஒரு படமாவது நடிக்கும் அளவுக்கு நடிக்கும் திறமை இருக்கும். அதுபோலத்தான் இந்த கணிணிக்கு விசிறியாகும் காரியமும் எல்லாராலுமே கூடும்.அப்படியே இன்னும் கொஞ்சம் ஆர்வம் இருந்தால் சில கணிப்பொறியாளர்களை கூட இந்த அயல்துறைக்கார விசிறிகள் விஞ்சி நிற்பர்.

இப்படி இரு துறைகளில் ஜமாய்ப்பவர்களை பார்த்தால் எனக்கு பொறாமையாய் இருக்கும். புலம்பெயர்ந்த தமிழன் போல.அவனுக்கு தமிழும் தெரியும் ஆங்கிலமும் கற்றிருப்பான். ஆனால் அயல்நாட்டில் பிறக்கும் நம் தமிழ் சிட்டுகள் வழக்கம் போல ஆங்கிலம் பக்கமாய் சாய்ந்துவிடுவர். அவர்கள் பேசும் "டமிள்" சமயத்தில் சுவையாகவும் இருக்கும். காரையும் கராஜையும் சுத்தம் செய்து கொண்டிருந்தேன்.இங்கு பிறந்த தமிழ் பொடிசு ஒன்று என்னைக் கேட்டது "காப்பாற்றவா அங்கிள்?". முதலில் புரியவில்லை. கொஞ்சம் யோசித்தபின்பு புரிந்தது "Need any help uncle?" என்பதை அப்பொடிசு அப்படி மொழிபெயர்த்திருக்கின்றது. இப்படி NRIகுழந்தைகள் ஆங்கிலக்கரையோரமாய் ஒதுங்கிவிடுகின்றார்கள். ஒரே ஒரு நன்மை பாதி வரலாறுபுவியியலும் பாதி அறிவியலும் ஹிஸ்டரி,டிராவல் சேனல் பார்த்தோ அல்லது டிஸ்கவரி சேனல் பார்த்தோ கற்றுப்பர். நமக்கோ அது விட்டு விட்டுத்தான் புரியும். கூர்ந்து கவனிக்க வேண்டும்.யாருக்கு பொறுமை இருக்கின்றது. கமுக்கமாய் நடிகர்கள் பேட்டிக்கு தாவிவிடுவோம்.

ஆமாம் நீ என்னச் சொல்ல வருகின்றாய் என கேட்கின்றீர்களா? சரியாய் கேட்டீர்கள். இப்போதெல்லாம் இப்படி குழப்பம் குழப்பமாக எழுதுவதே என் வேலையாகப் போய்விட்டது. ஏன் இப்படி எழுதுகின்றேன். ஒருவேளை நான் கற்றவற்றை குறித்துவைக்கும் ஒரு நோட்டுபுத்தகம் போலவே நான் இவ்வலைப்பதிவை பாவிப்பதால் இருக்கலாம். பலசமயம் நான் ஏற்கனவே எழுதிய ஒரு பழைய பதிவிலிருந்து ஒரு குறிப்பிட்ட சுட்டியை எடுக்க பலவாறு என்பதிவுகளை தேடியும் கிடைக்காமல் தோற்றிருக்கின்றேன். அங்காங்கே பலவிஷயங்களை பலமாதிரியும் கிறுக்கி வைத்திருப்பதால் இப்படியாகிப்போகின்றது. இதனைப் போய் நான் வகைவகையாக தொகுத்து அட்டவணைபடுத்தியிருக்கின்றேன் என நண்பர் கூடுதுறை முதலில் சொன்னபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவர் தனது வலைப்பக்கத்தில் எனது பழைய பதிவுகளை முடிந்த அளவுக்கு அழகாக வரிசைப் படுத்தியிருக்கின்றார். நீங்களும் போய் பார்வையிடலாம். அவருக்கு என் நன்றிகள்.

பிகேபி அட்டவணை

சம்பந்தமே இல்லாமல் ஐந்து வரிகள் இங்கே.

  • நடிகர் நெப்போலியன் ஜீவன் டெக்னாலஜீஸ் எனும் மென்பொருள் நிறுவனத்திற்கு சேர்மனாக உள்ளார்.
  • iPhone என்ற சொல்லுக்கு உண்மையான சொந்தகார நிறுவனம் சிஸ்கோதானாம். முதலில் மோதிக்கொண்ட இருவரும் பின் சமரசமாகிக்கொண்டனர். புதிய ஆப்பிள் ஐபோனையும் பழைய சிஸ்கோ ஐபோனையும் மேலே படத்தில் காணலாம்.
  • ஜெர்மனியிலும் இங்கிலாந்திலும் ஜிமெயில் ஜிமெயில் எனப்படுவதில்லையாம். கூகிள் மெயில் எனப்படுகின்றது.எல்லாம் டிரேட்மார்க் பிரச்சனை தான்.
  • நீங்கள் அமெரிக்காவில் இருக்கீங்களா? AT&T நிறுவனம் வழங்கும் "வீடியோ ஷேர்" சேவை மூலம் கைப்பேசியில் பேசுபவர் முகத்தை மறுமுனை நபர் வீடியோவாக தனது செல்போனில் பார்க்க முடியுமாம். என்ன விலை தான் கொஞ்சம் கண்ணை சுற்றுகின்றது.$0.30 per minute.
  • நீங்கள் இந்தியாவில் இருக்கீங்களா? உங்கள் மொபைல்போனுக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு SMS விளம்பரத்துக்கும் 20 காசு கொடுக்கின்றார்களாம் mginger-காரர்கள்.முயன்றுபாருங்கள் நான் கியாரண்டியில்லை. சும்மாவா 5 விளம்பரம் வந்தால் ஒரு கிலோ அரிசி வாங்கலாமே.

பாரதியார் பகவத்கீதை இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக.வெளியீடு http://www.tamilhindu.com Bharathi Bhagavathgita in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Sunday, September 07, 2008

மிரட்டுவது பெயர்கள்

HTML மொழியின் சாதாரண கட்டளைகள் கூட தெரியாமல் இன்றைக்கு நம்மால் உயர்ரக வலைத்தளங்கள் சொந்தமாய் வைத்துக்கொள்ள முடிகின்றது. ப்ராண்ட் பேஜ், டிரீம்வீவர் வைத்து கிளிக்கி கிளிக்கியே சாமானியர்கள் வலைப் பக்கங்களை படைக்கலாம். HTML tags பற்றி கேள்விபட்டிருக்க வேண்டியது கூட தேவையில்லை. இப்படி ஒரு புரோகிராமிங் லாங்க்வேஜும் தெரியாமல் வெப்பக்கங்கள் படைக்க அதுவும் டேட்டாபேஸ் இணைப்போடு கூடிய பிலாகையும் தாண்டி, கொஞ்சம் அதிகமாய் முழுசாய் தனிநபர் அல்லது குறுநிறுவன போர்ட்டல்கள் அமைக்க அநேக ஒருசொடுக்கு மென்பொட்டலங்கள் இணையத்தில் இன்றைக்கு இலவசமாய் கிடைக்கின்றன. என்ன,பெயரைக் கேட்டதும் அட என்னமோ ஏதோவென பயந்துவிடக்கூடாது. அதுதான் இங்கு முக்கியம்.

Drupal என்றதும் என்னமோ அது ஒரு உச்சகட்ட தொழில்நுட்பமென நீங்கள் பயந்தால் போச்சு.அது இதுமாதிரி ஒரு இலவச மென்பொட்டலம் தான். இதனைக் கொண்டு ஒரு சொடுக்கில் அருமையான பெர்சனல் அல்லது குறுநிறுவன போர்ட்டல்கள் படைக்கலாம். அப்படியே தான் Joomla!-வும். இல்லையெனில் நீங்கள் mambo-வை முயன்று பார்க்கலாம். இன்னொன்று xoops. பார்த்தீர்களா இப்படி பயமுறுத்தும் பல பெயர்களில் அநேக பீஸ் ஆப் கேக்குகள் நம்மிடையே உண்டு. நுழைந்து பார்த்தால் ஒன்றுமே இருக்காது. இன்றைக்கு பெரும்பாலான ஹோஸ்டிங் நிறுவனங்கள் இதுபோன்ற காம்ப்ளிகேட்டட் மென்பொருள்களை ஒரே சொடுக்கில் நிறுவுவதற்கான வசதிகளை கொண்டுள்ளன.அப்புறமென்ன நாமெல்லாம் பொட்டிக்கடைக்கு கூட போர்ட்டல் வைத்துக் கொள்ளலாம்.

வலைப்பக்கங்கள் மட்டுமின்றி desktop மற்றும் mobile database applications கூட இன்றைக்கு ஒரு துளி புரோகிராமிங் அறிவு இல்லாமல் படைக்கலாமாம். அதற்கான வசதி வாய்ப்புகள் உருவாகி உள்ளன. உதாரணமாக பெங்களூரை சேர்ந்த Lyte3 எனும் நிறுவனத்தின் lyteRAD எனும் மென்பொருளை கொள்ளலாம். lyteRAD CE-யை அவர்கள் இலவசமாய் வழங்குகின்றார்கள். தனிநபர்களும் குறுநிறுவனங்களும் தங்களுக்கு தேவையான சிறு சிறு மென்பயன்பாடுகளை டேட்டாபேஸ் இணைப்போடு கூடி தாங்களே எளிதாக உருவாக்கிக் கொள்ளலாமாம். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த மென்பொருள்களை கைப்பேசியில் கூட பெரும்பாலும் பயன்படுத்த முடியுமாம்.

நமக்கு இன்ட்ரெஸ்டிங்காய் பலதும் அங்காங்கே நடந்துகொண்டுதான் உள்ளன.

பிரபல மொழிபெயர்ப்பு சிறுகதைகள் தொகுப்பு தமிழில் இங்கே சிறு மென் புத்தகமாக. Popular Translated Short Stories in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Wednesday, September 03, 2008

தீவொன்று வேண்டும்

நீண்ட விடுமுறை நாட்களுக்கு பின் கணிணி பக்கம் திரும்பியிருக்கின்றேன். இப்படி கொஞ்ச நாட்கள் அமைதியாக மவுனமாக எதுவும் பேசாமல் அமர்ந்திருப்பதும் தனி சுகம் தான். ஆனாலும் மருத்துவர்கள் புதிதாக கூறும் Discomgoogolation எனும் மேனியாவை மட்டும் தடுக்க இயலவில்லை. இந்த மேனியா உள்ளவர்கள் இருபத்து நான்கு மணிநேரமும் ஆன்லைனிலேயே இருக்க விழைவராம். அரைமணிக்கொருதரம் அல்லது இன்னும் அடிக்கடியாய் தன் மின்னஞ்சலை சோதித்து பார்ப்பராம். இன்றைய பங்கு வர்த்தகத்தில் தன் பங்குகளின் நிலைஅறிய பாவப்பட்ட அந்த பக்கத்தை நிமிடத்துக்கொருதரம் Refresh செய்துகொண்டே இருப்பாராம். எந்த தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள கூகிளில் தேட தன் முன்னே இணையம் இல்லாவிட்டால் இந்த குரூப்காரர்களுக்கு தலையே வெடித்துவிடும். மொத்தமாய் பொறுமையை இழந்து போவர். பக்கத்து நபர் பாவம் இவரின் அனாவசிய எரிச்சலுக்கும் கோபத்துக்கும் ஆளாவர். ஆங்கிலத்தில் feeling of distress or anxiety when unable to gain immediate information access என்கின்றனர். இதிலிருந்து தப்பிக்க 3G இல்லா Edge இல்லா GPRS இல்லா Wi-Fi இல்லா அல்லது இணைய இணைப்பே இல்லா ஒரு காட்டிற்கு போகவேண்டும். எப்படி போவதாம்? சிங்கப்பூர் தீவு முழுவதும் இலவச அகலப்பட்டை Wi-Fi உள்ளதாக நண்பர் கண்ணன் மூலம் அறிந்தேன். கலிபோர்னியா மாநில மவுன்டன்வியூ நகர மக்களுக்கு கூகிள் இலவசமாக GoogleWiFi வழங்குகின்றது. அது சீக்கிரத்தில் சான்பிரான்சிஸ்கோவுக்கும் நீட்டிக்கபடவிருக்கின்றதாம். எனக்கு தெரிந்து ஏற்கனவே இந்தியாவில் புனே நகரை முதல் Wi-Fi நகராக்கி இருக்கின்றார்கள். சியாட்டில் ஸ்டார்பக்ஸ் முதல் சென்னை அஞ்சப்பர் வரைக்கும் ஹாட்ஸ்பாட்களாக காஃபியோடு இலவச வைஃபியையும் கொடுக்கின்றார்கள். இப்படி எங்கும் நிறைந்த இணையத்திலிருந்து திடீரென நாம் துண்டிக்கப்பட்டால் Discomgoogolation ஒன்றும் ஆச்சரியமில்லையே. இந்த வார்த்தையிலேயே google வருவதை கவனித்தீர்களா?

இது இப்படி இருக்க விமான பயணத்தின் போதாவது புலன்களையெல்லாம் அடக்கி சிறிது நேரம் இணையத்தை துறந்து தவம் இருக்கலாமென்றால் Aircell-ன் Gogo சேவை அந்த பொழுதுகளையும் விழுங்கிவிடும் போலிருக்கின்றது. இவர்கள் விமான பயணிகளுக்கு விமான பயணத்தின் போதும் Wi-Fi வழங்க கிளம்பியிருக்கின்றார்கள்.

யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் என இனி காதலி பாடமாட்டாள். இணையம் இல்லாத தீவொன்று வேண்டும் என அவள் பாடுவாள்.

ரமணிசந்திரன் "சாந்தினி" தமிழ் புதினம் இங்கே மென் புத்தகமாக. Ramani chandran Chandini Novel in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்