உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, February 19, 2009

கணிணியின் ஆழ்துயில்

இப்போது வந்துள்ள புதுவகையான SSD (Solid State Drive) ஹார்டு டிரைவுகள் கணிணியின் வேகத்தை வெகுவாக கூட்டியுள்ளதாம். கணிணியின் பூட்டிங்கிலிருந்து மற்ற எல்லா வேலைகளும் வெகு விரைவாக இருப்பதால் ஒருமுறை SSD உள்ள கணிணியில் வேலை செய்த பின் சாதாரண சுழல்தட்டுள்ள ஹார்டிரைவில் வேலை செய்வது மிக கடினமாக உள்ளதாக சொல்கின்றார்கள். இப்போது நெட்புக்குகளில் சராமாரியாக வரும் இவை விரைவில் கார்பரேட் செர்வர்களையும் நோக்கி பயணிக்கும் போலிருக்கின்றது. இந்த NAND சில்லு SSD -டிரைவுகள் சீக்கிரத்தில் இன்றைய கிளாசிக் ஹார்ட்டிஸ்குகளை பலி கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

என் கணிணி வேகமாக பூட்டாகிவர நான் பயன்படுத்தும் பழங்கால டெக்னிக் ஹைபர்னேசன்.(Hibernation). வெண்பனி பொழிந்து எங்கும் குளிர் நிறைந்து கிடக்கும் இக்குளிர்காலத்தில் மனிதர் நாம் Fireplace-யை நாடுகிறோம்.அப்பாவி மிருகங்கள் என்ன செய்யுமாம்.
குளிர்காலம் வந்ததும் அவை தம் குகைகளிலே ஆழ்நிலை தூக்கத்திற்கு போய்விடும் என்கின்றார்கள்.அவை மேல் பரந்திருக்கும் ரோமங்கள் சிறிது உஷ்ணம் கொடுக்கும் அதேவேளையில் உடலில் அவை அது நாளும் சேமித்து வைத்திருந்த கொழுப்பு அவை உயிர்காக்கும். கதிரவன் எட்டிப்பார்க்கும் வசந்தகாலம் வந்ததும் இத்துயிலிருந்து எழும்பி மீண்டும் இரை தேட ஓடத் தொடங்கும். இந்த இயக்கம் தான் ஹைபர்னேசன்.

கணிணியிலும் இந்த ஹைபர்னேசனை Biomimicry செய்துவிட்டார்கள். எப்படி?

நான் விண்டோசை வேகமாக கொண்டுவருவதற்காக கணிணியை Shutdown செய்யாமல் Hibernate செய்வதுண்டு. நாம் hibernate செய்யும் போது அப்போது திறக்கப்பட்டிருக்கும் நம் பயன்பாடுகள், ஓடிக்கொண்டிருக்கும் நம் மென்பொருள்கள் எல்லாம் மூடப்படாமல் அப்படியே உறைந்து நம் கணிணியில் ஒரு கோப்பில் சேமிக்கப்படும். அதனால் மீண்டும் உங்கள் கணிணியை நீங்கள் தொடக்கும் போது மிக வேகமாக திறந்து ஏற்கனவே முன்பு நீங்கள் திறந்துவைத்திருந்த உங்கள் பயன்பாடுகளையும், ஓடிக்கொண்டிருந்த மென்பொருள்களையும் மீண்டும் கொண்டு வந்து தொடரும்.Shutdown செய்யாமல் ஹைபர்னேட் செய்யும் போது அப்போது உங்கள் கணிணியின் நினைவகத்தில் ஓடிக்கொண்டிருந்த எல்லா சமாச்சாரமும் hiberfil.sys எனும் கோப்பில் உறைந்து சேமிக்கப்படுவதால் இது சாத்தியமாகின்றது. உபுண்டுவில் இதை .hibernate.img என்பார்களாம்.

மனிதரின் ஹைபர்னேட்டாகிப் போனது யார் என கேட்டு எனக்கு ரிப் வேன் விங்கிளை (Rip Van Winkle) நினைவுபடுத்தினான் கோபால்.வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம்.
ஆனால், அவை தான் வாழ்வை இனிமையாக மாற்றும்.க.மு.நடராஜன் “உடைமை ஊருக்கே” இங்கே தமிழில் மென் புத்தகமாக. Ka.Mu.Natarajan "Udaimai Uurukee" Tamil pdf ebook Download. Right click and Save.
Download


Email PostDownload this post as PDF

Tuesday, February 17, 2009

உண்மை பேசிக்

மைக்ரோசாப்டின் விண்டோஸ், ஆப்பிளின் மேகிண்டாஷ், இலவச லினக்ஸ் என முப்பெரும் கணிணிநடை பாதைகள் இருந்தாலும் சீக்கிரமே ஒன்று மட்டுமே நிலைத்திருக்கும் காலம் வந்துவிடும் போலிருக்கின்றது. குறைந்த விலையில் ($199) வெளியாகும் நெட்புக்குகள், அதிவேக இணைய இணைப்புகள், அதனால் ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வரும் மேக கம்ப்யூட்டிங் (Cloud computing) முறைமை மைக்ரோசாப்டின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. கூகிள் கொண்டு வரவிருக்கும்(?) ஜிடிரைவ் இன்னொரு கண்டம். அது வந்துவிட்டால் External ஹார்ட் டிரைவுகள், CD, DVD மற்றும் USB Flash டிரைவுகளின் மார்க்கெட் படுத்து விடலாம். எல்லா கோப்புகளையுமே நாம் இணைய ஜிடிரைவ் மையத்தில் சேமித்து வைத்துக் கொள்ளலாமே.பிறகு எங்கிருந்து வேண்டுமானாலும் அவற்றை எடுத்துக் கொள்ளலாமே.

கணிணி உதவியின்றி நேரடி இண்டர்நெட் இணைப்பு வசதியோடு வரும் இன்றைய HDTV-யில் இரட்டைசொடுக்கி உங்கள் ஜிடிரைவில் நீங்கள் சேமித்துவைத்திருக்கும் மூவியை பார்க்கலாம்.அதிவேக இணைய இணைப்பால் இன்றைக்கு இது எல்லாமே சாத்தியம்.

சாமானியர்களுக்கு இத்தனை சக்திகொண்ட வன்பொருள்களும் மென்பொருள்களும் எதற்கு? இணையம் மேயவும் சில கோப்புகளை கோர்க்கவும் சாதாரண இலவச லினக்சே போதுமானது என்பதால் பத்துவருடங்கள் முன்னோக்கிப் பார்த்தால் விண்டோஸ் மற்றும் மேகிண்டாஷின் மார்கெட்ஷேர் காணாமல் போயிருக்கலாம்.

REALbasic என்றொரு மென்பொட்டலம். புரோகிராமிங் மொழியான விசுவல் பேசிக் போன்றே இயங்குகின்றது. ஆனால் இதன் விசேசம் இதனால் உங்கள் விண்டோஸ் கணிணியில் உருவாக்கப்படும் ஒரு பயன்பாட்டை அப்படியே மேகிண்டாசிலும் லினக்சிலும் ஓட விடலாம். அதாவது இது Cross-compiler வசதியைக் கொண்டுள்ளது PureBasic-ம் இதே சக்தி கொண்டிருப்பதாக சொல்கின்றார்கள். ஒரு பிளாட்பார்மில் எழுதி பல பிளாட்பார்ம்களில் ஓடவிட இதொரு நல்ல வழி.


நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய்!

நீ துயரத்தில் இருக்கும்போது,உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய்!


சாண்டில்யன் ”நிலமங்கை" புதினம் இங்கே தமிழில் மென் புத்தகமாக. Chandilyan Nilamangai Novel in Tamil pdf ebook Download. Right click and Save.
Download


Email PostDownload this post as PDF

Sunday, February 15, 2009

மரத்தை நட்டவன்

தக்காளி சாப்பிடுவது ரொம்பவும் நல்லதுவென ஒரு ஆய்வுக்கட்டுரை வெளியானது. ஒரு வாரத்திலேயே இன்னொரு விஞ்ஞானிகள் குழு தக்காளி சாப்பிடுவது அவ்வளவு நல்லதில்லை என அறிக்கை வெளியிட்டது. நிறைய தண்ணீர் குடிப்பது நல்லதுவென ஒரு கும்பல் கண்டறிய சில நாட்களிலேயே இன்னொரு கும்பலோ ரொம்ப தண்ணீர் குடிப்பது உடம்புக்கு கெடுதியாக்கும் என்றார்கள்.ஏற்கனவே குழம்பிப்போய் இருக்கும் மக்களை இப்படி அவர்கள் பங்குக்கு குழப்பிக் கொண்டிருப்பர். சூரியனின் அதிக எரிச்சலால் பூமி சூடாகி கடல்நீரெல்லாம் வற்றிப்போய் கொண்டிருக்கிறதுவென ஒருசாரார் கூற இன்னொரு சாராரோ இல்லவே இல்லை குளோபல் வார்மிங்கால் (Global Warming) துருவப் பனிமலைகள் உருகி கடல் மட்டம் உயருகின்றது.கடலோர நகரங்கள் சீக்கிரமே கடலுக்கடியில் போனாலும் போய்விடும் அபாயம் இருக்கின்றது என்றார்கள்.இன்னும் குழப்பம்.

மார்கெட்டில் பெரிதாக பேசப்பட்டு இன்றைக்கு பில்லியன் டாலர் பிசினசாகிப் போன "கிரீன் ஹவுஸ் கேஸ்" "குளோபல் வார்மிங்" "கார்பன் எமிசன்" போன்ற ஜார்கன் வார்தைகளெல்லாம் இப்போது சுத்த பிராடு என்கின்றார்கள். "...the worst scientific scandal in history" என்கின்றார் IPCC விஞ்ஞானி Dr.Kiminoir Itoh.1998 வரை என்னமோ சூரியன் தகித்தது உண்மைதானாம். ஆனால் சமீபகாலமாக அவன் சீற்றம் தணிந்து உண்மையில் பூமி கூலாகிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். இன்னொரு ஐஸ்ஏஜ் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையாம். குளோபல் வார்மிங் பெயரைச் சொல்லி நோபல் பரிசையும் தட்டிச்சென்றவர்கள் இப்போது அதன் பெயரை உசாராக "கிளைமேட் சேஞ்ச்" என்றாக்கி விட்டார்கள். அதாவது இந்த கிரீன்ஹவுஸ் கேசால் தட்பவெப்பநிலையில் அசாதாரண மாற்றங்கள் ஏற்படுகிறதாம். பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. கொஞ்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்திருகின்றது.

இதை எழுதிக்கொண்டிருக்கும் போதே கோபால் ஒரு கேள்வி எழுப்பினான்.பூமி 23 1/2 பாகை சாய்ந்திருப்பது உனக்கு தெரியும்.ஆனால் அப்படி சாய்ந்திராவிட்டால் பூமியில் மனித இனமே வாழ்வது கஷ்டகாலமென உனக்குதெரியுமா வெனக்கேட்டான். ஆச்சரியமாகிப் போனது. அந்த பூமியின் சாய்வுதான் உலக நாடுகளில் வெவ்வேறு பருவகாலங்கள் வருவதற்கு காரணமெனவும் அப்படி சாய்ந்திராவிட்டால் ஒரு வேளை பாதி பூமி மனிதர் வாழவே முடியாதபடி கடும் குளிராகவும் இன்னும் பாதி பூமி மனிதனே வாழ முடியாத படி கடும் வெப்பமாகவும் இருந்திருக்கும் என்றான்.நம்பவே முடியவில்லை.யார் அதை சாய்த்திருப்பார்? எப்படி அது லாவகமாக சாய்ந்தது? ஒருவேளை அது பரிணாம வளர்ச்சியின் இன்னொரு தற்செயலான நிகழ்வா? யோசித்துக்கொண்டிருக்கும் போதே "மரத்தை வெச்சவன் தண்ணி ஊத்துவான்டா" என்ற கோபால் சில நொடிகளிலேயே அன்பே சிவம் கமல் கணக்காய் குறட்டையில் ஆழ்ந்திருந்தான். குழப்பத்திலிருந்தேன் நான்.தண்ணியிலிருந்தானோ?.
அதிக உயரங்களை எட்டுவதற்கு உதவும் நண்பரைப் பெற்றிருப்பது சிறந்தது.
ஆனால், அதிக உயரங்களிலிருந்து விழும்போது
தாங்கிப் பிடிக்கும் நண்பரைப் பெற்றிருப்பது,
கடவுளின் பரிசு.

ஒன்பதாம் வகுப்பு சிறுகதைகள் தொகுப்பு மென்புத்தகம் இங்கே தமிழில்.9th standard Siru Kathaikal in Tamil pdf ebook Download. Right click and Save.
Download


Email PostDownload this post as PDF

Wednesday, February 11, 2009

எங்கிருந்தாலும்

ரொம்ப நாளைக்கப்புறமாய் கூகிளிடமிருந்து சத்தமேயில்லாமல் "வாவ்" என சொல்ல வைக்கும் வசதி ஒன்று வெளியிடப் பட்டிருக்கின்றது. வேண்டாம் எனச் சொல்லியும் கேட்காமல் கார் ஷோ பார்க்கப்போகின்றேன் என கடும் பனிப்பொழிவிலும் கிளம்பிச்சென்றான் கோபால். சிக்காகோவிலிருந்து டெட்ராயிட் போக ஐந்து மணி நேரமாகும். பாதிவழியியே அவனிடமிருந்து போன் கால் வந்தது.தெரியாமல் புறப்பட்டு விட்டேன்டா ரோடு எங்கே கிடக்குனே தெரியல்லை பயங்கர ஸ்னோ என்றான். இவன் டெட்ராயிட் போய் சேர்ந்தானா இல்லையா, இப்போதைக்கு எங்கே இருக்கின்றான் என அவன் நகர்வை கண்காணித்துக் கொண்டே இருக்க கூகிள் வசதி செய்திருக்கின்றது. திருமணம் ஒன்றில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு பேருந்தில் புறப்பட்ட நண்பன் இப்போதைக்கு எங்கே இருக்கின்றான் எனவும் டிராக் செய்யலாம். எல்லாம் Google Latitude எனும் வசதிதான்.இந்த வசதியை கூகிள் மேப்பின் மீது வைத்துள்ளார்கள். இந்த வசதி மூலம் ஒரு நபரின் நகர்வை real time-ல் நீங்கள் கண்காணித்துக் கொண்டேயிருக்கலாம். என்ன அவரிடம் ஒரு ஸ்மார்ட்போன் இருக்கவேண்டும்.அது Blackberry-யாகவோ Symbian S60-யாகவோ, அல்லது Windows Mobile-லாகவோ இருக்கலாம். Android மற்றும் iPhone-ல் இன்னும் சில நாட்களில் இவ்வசதி வரஉள்ளது. கூகிளின் cell tower database மற்றும் உங்கள் போனின் cell ID அல்லது GPS location detection வசதி இந்த நுட்பத்திற்காக பயன்படுத்தப்படும். யாருக்கெல்லாம் இம்மாதிரி உங்கள் இருப்பிடத்தை காட்டலாம், யாருக்கெல்லாம் இம்மாதிரி உங்கள் இருப்பிடத்தை காட்டக்கூடாதுவென பிரைவசி வசதியும் உள்ளதாக கூகிளிலிருந்து சொல்லியிருக்கின்றார்கள். பாண்டிச்சேரியில் நீங்கள் பூரித்திருக்க பொய்யாக உங்கள் தற்போதைய இருப்பிடமாக உங்கள் அலுவலகத்தையும் காட்டலாமாம். புல்லரிக்கவைக்கும் வசதி தான். ஆனால் ஏனோ பயமாயும் இருக்கின்றது.

http://www.google.com/latitudeதெய்வம் காட்டுமே தவிர
ஊட்டாது.
God helps those who help themselves

ரமணிச்சந்திரன் நாவல் "பொன்மானைத்தேடி" இங்கே தமிழில் மென் புத்தகமாக. Ramanichandran Pon Maanai Theadi Novel in Tamil pdf ebook Download.
Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Sunday, February 08, 2009

டிவிடி அகேகே பத்து

டிவிடி - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - பத்து
1.CyberLink PowerDVD அல்லது Corel WinDVD போன்ற காசுகொடுத்து வாங்கும் டிவிடி பிளயர் மென்பொருள்கள் என்னிடம் இல்லை. மெனுவுடன் சப்டைட்டிலும் காட்டும் எதாவது இலவச DVD Player மென்பொருளை பரிந்துரை செய்ய முடியுமா?
VLC media player
http://www.videolan.org/vlc/

2.வீடியோவை பார்த்துக்கொண்டிருக்கும் போதே எளிதாக சத்தத்தை(Volume) கூட்ட ”மேல் நோக்கு அம்புகுறியையும்” சத்தத்தை குறைக்க ”கீழ் நோக்கு அம்புகுறியையும்” வீடியோவில் முன்னோக்கிச்செல்ல ”முன் நோக்கு அம்புகுறியையும்” வீடியோவில் பின்னோக்கிச்செல்ல ”பின் நோக்கு அம்புகுறியையும்” கீபோர்டில் குறுக்கு வழிகளாக பயன்படுத்தும் எதாவது இலவச வீடியோ பிளயர் சொல்லுங்களேன்?
GOM Media Player
http://www.gomlab.com/eng/

3.எனது டிவிடியிலுள்ள ஒரு திரைப்படத்தின் பல VOB கோப்புக்களை ஒரே AVI, MPEG அல்லது DivX கோப்பாக சேமித்து வைக்க எதாவது வழி சொல்லுங்களேன்?
bitRipper
http://bitripper.com/index.html

4.இந்த ஃபார்மேட் வீடியோவை வேறு ஒரு ஃபார்மேட் வீடியோவாக மாற்ற எதாவது இலவச மென்பொருள் சொல்லுங்களேன் ப்ளீஸ்?
SUPER © Simplified Universal Player Encoder & Renderer.
http://www.erightsoft.com/SUPER.html

5.மேலே சொன்ன சூப்பர்மென்பொருளை பயன்படுத்த கொஞ்சம் கடினமாக இருக்கிறதே.வேறெதாவது பயன்படுத்த எளிதான மென்பொருள் கொடுக்க முடியுமா?
Quick Media Converter
http://www.cocoonsoftware.com

6.Nero ,Sonic போன்ற CD / DVD Burner மென்பொருள்களை காசுகொடுத்து வாங்க நான் தயாராயில்லை. எதாவது ஒரு இலவச CD / DVD Burner மென்பொருளை பரிந்துரை செய்ய முடியுமா?
CDBurnerXP
http://cdburnerxp.se

7.எனது முழு டிவிடியையும் ஒரு ISO கோப்பாக மாற்றி எனது ஹார்ட் டிரைவில் சேமித்து வைக்க வேண்டும்?எப்படி?
CDBurnerXP
http://cdburnerxp.se

8. ISO கோப்பு வடிவில் எனது கணிணியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு டிவிடி திரைப்படத்தை எப்படி எளிதாக பார்ப்பது?
Virtual CloneDrive
http://www.slysoft.com/en/virtual-clonedrive.html

9.என்னிடம் இருக்கும் டிவிடி-யிலிருந்து சில காட்சிகளை வெட்டி எடுப்பது எப்படி?
DVD Knife
http://www.vcsoftwares.com/dk.html

10.இப்போதைக்கு உங்களுக்கு மிகவும் பிடித்தமான டிவிடி பிளயர்?
USB பென் டிரைவை செருக வசதி கொண்ட எல்லா டிவிடி பிளயர்களும்.


வெற்றியை நோக்கிப் பற!
பறக்க முடியாவிட்டால் ஓடு!
ஓட முடியாவிட்டால் நட!
நடக்கவும் முடியாவிட்டால் ஊர்ந்து செல்.
ஆனால், எப்படியாவது நகர்ந்துகொண்டே இரு.

டாக்டர் நாராயணரெட்டியின் உயிர் மென்நூல் இங்கே தமிழில்.Dr. Narayana Reddy "Uyir"in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Friday, February 06, 2009

நாடு இல்லாமல் ஒரு மொழி

அநியாயமாக இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படும் விடயத்தில் விஷமாக நீண்ட அமைதி காக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு நம் கண்டனங்கள்.

பிரபல இலங்கை எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் சிந்திக்க வைத்த சில வரிகள் இங்கே:


‘நான் நிறைய பேசிவிட்டேன். நீங்கள் எந்த நாடு, என்ன மொழி பேசுவீர்கள் என்று சொல்லவில்லையே?’.

நான் சொன்னேன். நானும் உங்களைப் போலத்தான். நான் பேசுவது தமிழ்மொழி. இலங்கைக்காரன். அங்கே எங்கள் மொழியை சிங்களம் விழுங்கிக்கொண்டிருக்கிறது.

உங்கள் மொழியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது பழைய மொழி அல்லவா?

அது உண்மை. இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மையான இலக்கியங்கள் எங்களிடம் இருக்கின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு 300 ஆண்டுகள் முன்னராகவே செதுக்கிய தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் குகைகளில் கிடைக்கின்றன. இன்று உலகத்தில் பல நாடுகளில் 80 மில்லியன் மக்கள் தமிழ் பேசுகிறார்கள்.

எண்பது மில்லியனா? நம்பவே முடியவில்லை. எங்கள் மொழியிலும் பார்க்க 80 மடங்கு அதிகமான எண்ணிக்கை. அதிர்ஷ்டம் செய்த மொழி. ஆனால் உங்களுக்கென்று ஒரு நாடு உண்டா?

இல்லை.

உங்கள் மொழியில் தேசிய கீதம் உண்டா?

இல்லை.

அப்படியானால் உங்கள் மொழிக்கும், என் மொழிக்கும் பெரிய வித்தியாசமே இல்லை.

எப்படி அவ்வளவு நிச்சயமாகச் சொல்லமுடியும்?

நீங்கள் வரலாற்றைப் படித்தால் தெரிந்துவிடும். கிறிஸ்து பிறப்பதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னரே ஹீப்ரு மொழியும், அராமிக் மொழியும் செழித்து வளர்ந்தன. இரண்டுக்குமே சமவயது. இரண்டிலுமே எழுதப்பட்ட செல்வங்கள் இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நாளடைவில் இரண்டு மொழிகளுமே நலிந்தன. 100 வருடங்களுக்கு முன் ஹீப்ரு மொழி எழுத்தில் மட்டுமே வாழ்ந்தது. பேசுவதற்கு ஓர் ஆன்மா இல்லை. இன்று ஐந்து மில்லியன் மக்கள் ஹீப்ரு பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். பழைய இலக்கியங்களும் புதிய இலக்கியங்களும் படிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நாடு உண்டு. அதன் பெயர் இஸ்ரேல். அவர்களுடைய மொழி இனி மேல் அழியவே அழியாது.

நாடு இல்லாமல் ஒரு மொழி வாழமுடியாது என்று சொல்கிறீர்களா?

நான் ஒரு தலைமுடி திருத்துபவன். மொழியியல் அறிஞன் அல்ல. எனக்கு என்ன தெரியும்? நாடு இல்லாமல்தானே என் மொழி சிதைந்தது. நாடு இருந்தபடியால் தானே இறந்து போன ஹீப்ரு மொழி மறுபடியும் உயிர்பெற்று நிலைத்து நிற்கிறது. உங்கள் மொழி - தமிழ் - நாடு இல்லாமல் வாழும் என்று நினைக்கிறீர்களா?

‘ஆனால் இந்தியாவில் ஒரு தமிழ் மாநிலம் இருக்கிறதே.’

மாநிலம் வேறு. நாடு வேறு. இன்று உலகத்திலுள்ள ஒரு சின்னஞ் சிறிய நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள் - மால்ட்டா. அங்கே 400,000 மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுடைய மொழி மால்ட்டீஷ். அந்த மொழி அழியுமா? அழியாது. ஒரு மைல்கல் எப்போதும் உண்மை பேசுவதுபோல நான் பேசுகிறேன். அவர்களுடைய மொழி அழிய வேண்டும் என்றால் முதலில் அந்த நாடு அழியவேண்டும். உங்கள் நாட்டுக்கு சமீபத்தில் இருக்கும் மாலை தீவு, அதை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடைய சனத்தொகை 350,000. அவர்களுடைய மொழி திவேஹி. அது அழியுமா? எப்படி அழியும்? 300,000 மக்கள் வாழும் நாடு ஐஸ்லாண்ட். அவர்களுடைய மொழி ஐஸ்லாண்டிக். அது அழியுமா? இல்லை. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

நம்புவதற்கு கஷ்டமாக இருக்கிறது. பத்து மில்லியன் மக்கள் ஒரு மொழியைப் பேசினாலும் அவர்களுக்கு ஒரு நாடு இல்லாவிட்டால் அந்த மொழி அழிந்துவிடும் என்று சொல்கிறீர்கள்?

ஷாம்பூ போட்டு முடிந்ததும் அவர் முடி உலர்த்தியால் தலைமுடியைச் சீவி உலர்த்திக்கொண்டிருந்தார். அவர் வாய் மட்டுமே பேசியது, ஆனால் கைகள் வேறுயாருடையவோ கைகள்போலத் துரிதமாக வேலை செய்தன.

அப்படித்தான் என் சிற்றறிவுக்குப் படுகிறது. ஒரு மொழிக்குப் பாதுகாப்பு வேண்டும். ஒரு நாடுதான் அதைக் கொடுக்கமுடியும். உலகத்தில் 7000 மொழிகள் இருக்கின்றன என்று படித்திருக்கிறேன். அவற்றிலே 2000 மொழிகள் அழிவில் இருக்கின்றன. மீதியில், ஒரு நாடு பாதுகாப்புக் கொடுக்கமுடியாத மொழிகள் எல்லாம் ஒவ்வொன்றாக அழிவை நோக்கி நகர்கின்றன. அனைத்து மொழிகளையும் காப்பாற்ற முடியாவிட்டாலும் அவற்றை சேமிக்கவேண்டும். ஆவணப்படமாகவும், ஒலி வடிவமாகவும் கணிமைத் தொழில்நுட்பத்தில் பாதுகாக்கலாம். ஒரு மொழி அழிவது என்பது ஓர் இனம் அழிவதற்கு, ஒரு கலாச்சாரம் அழிவதற்கு சமம். கீழே விழுந்த முடியை திரும்பவும் ஒட்டமுடியாது. மொழியும் அப்படித்தான். பூமியிலிருந்து ஒரேயடியாக மறைந்துவிடும்.

நான் பேசமுடியாமல் அவரையே பார்த்தேன்.

‘ஒரு மொழியின் எதிர்காலத்தை அதைப் பேசும் மக்களின் எண்ணிக்கை தீர்மானிப்பதில்லை. அது போல அதன் வளர்ச்சிக்கும் எண்ணிக்கைக்கும் சம்பந்தமில்லை. ஒரு சின்னப் பரிசோதனை. உங்கள் நாட்டு சிங்கள மொழியின் கடந்த 50 வருட கால வளர்ச்சியுடன் தமிழ் மொழியின் ஐம்பது வருட வளர்ச்சியை ஒப்பிட்டுப் பாருங்கள். நான் சொல்வது உங்களுக்கே புரியும்.’

புதிய முடி அலங்காரத்தை நான் கண்ணாடியில் பார்த்தேன். திருப்தியாகவிருந்தது. காசாளரிடம் பணத்தைக் கட்டினேன். ஈராக்கிய நண்பரின் பெயரைக்கூட நான் அதுவரை தெரிந்திருக்கவில்லை. அது முக்கியமாகவும் படவில்லை.

எனக்குக் கவியின் வரிகள் ஞாபகத்துக்கு வந்தன.

நான் சாக்கடையில்
விழுந்து கிடக்கிறேன்.
என் கண்கள்
நட்சத்திரங்களில்.

நான் என் மொழி மீது வைத்த நம்பிக்கையைத் துறக்கத் தயாராகவில்லை.
-அ.முத்துலிங்கம்

நன்றி உயிர்மை
மேலும் படிக்க
http://www.uyirmmai.com/contentdetails.aspx?cid=62

சிறிலங்கா அரச படைகளின் கைகளில் தமது உயிர்களைப்பறிகொடுத்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு இவ்வறிக்கை சமர்ப்பணம்.வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் வெளியீடு - North East Secretariat on Human Rights
தமிழினப்படுகொலைகள் பாகம் 01 1956-2001 மென்நூல்
தமிழினப்படுகொலைகள் பாகம் 02 2002- மென்நூல்


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்